Saturday, April 28, 2012
என் ஞாபகங்கள்...
வெண்ணிலவை மேகங்கள் மறைத்து போதும்
என் மனதை எங்கேயோ தொலைத்த போதும்
நிம்மதி இழந்து நெடு நேரம் உலாவிடும் போதும்
என் மனதை பிழிந்தெடுக்கும்
எனதூர் ஞாபகங்கள்...
நித்திரையில் கனவு வரும்
அதில் என் பழைய நினைவுகள் உலாவி வரும்
வாழ்ந்த வீடு,
விளையாடிய நண்பர்கள்,
பாடசாலை பகிடிவதை,
இன்னும் என் ஞாபகங்களில்...
என் வீட்டுக்கருகாமையில்
வாகை மர நிழலின் கீழ்
சாத்திரம் சொல்லும் குறவர் கூட்டம்
எல்லாமே கனவில் தொல்லை தரும்
அதை மீட்க இன்பம் காணும்...
வயல் வரம்புகளில் நடப்பதும்
வாய்க்காலில் கால் நனைப்பதும்
காட்டு ஈச்சம் பழத்திற்காய்
காத வழி நடப்பதும்
கள்ளிப் பழம் பறித்து
கையில் முள் குத்தி முணு முணுப்பதும்
கிண்ணம் பழம் பொறுக்க
சேற்றில் கால் புதைத்து
ஆற்றில் வீழ்ந்து அம்மாவிடம் அடிபட்டது
எல்லாமே ஞாபகமிருக்கிறது
ஆனால்,நான்தான் ஊரில் இல்லை...
என்னை மறந்தாலும்
என் இதயத்தில் கல்வெட்டாய்
காலைச் சூரிய உதயமும்
கரைந்து செல்லும் காக்கா குரலும்
நிலவை ரசித்து மகிழ்ந்ததுவும்
முதலில் என் பிறந்த மண்ணில்தான்...
நேசித்த உறவுகள்
சொல்லாமல் விட்டுச் சென்ற சொந்தங்கள்
இத்தனையும் பிரிந்து இயல்பாக வாழ்ந்தாலும்
சொந்த ஊரின் சுகமான ஞாபகங்கள்
என்றும் என் நினைவலைகளில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment