Saturday, November 3, 2012

கறுப்புக்கல்



தியாக ஆடைகளில்
அந்தரங்கங்களாப் பேசிய நீ

வெள்ளாடைகளோடு 
விருந்திளராய் அழைத்து
ஹாஜிகளை குழந்தையாய் 
பார்த்த கஃபாவுக்குள்

உன் அச்சரத்துக்குள்
தியாக மை ஊற்றிக் கிடக்கிறது

தூரத்து முஸ்லீம் எல்லாம்
திரண்டு வந்து என்று சேர்ந்து
கறுப்பன் வெள்ளையன் என
பாகுபாடு ஏதுமிலா
கவலையுடன் கல்புருகி
கையேந்த தியாக உணர்வை
நெஞ்சுருக நினைத்துப் பார்க்க
வந்த ஹஜ்ஜே


படைத்தவனை நம்பி 
பாலைவனத்தினிலே
தாய் மகவை வைத்து விட்டுச்
சென்ற தோர் தியாகம் 
தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
அன்னை ஹாஜராவின்
பாதங்களைப் பஞ்சாக்கினாய்

கறுப்புக் கல்லாய் நின்று
இப்றாஹிம் நபியின் 
உள்ளத்திற்கு கபனிட்ட வேளை
தியாகமே நீ எழுந்து நின்றாய்.

இஸ்மாயீலைக் குழந்தையாக்கி
இப்றாஹீம் எண்ணத்தை சோதித்தாய்

எல்லைகளைக் கடந்து
இறுகப் பிணைப்புடன்
ஏழை பணக்காரன் என்ற 
பாகுபாடு ஏதுமில்லா
ஆசைகளைத் துறந்து
இரக்கத்தை வலியுறுத்தி
கட்டளைகளை நிறைவேற்ற 
கற்றுத் தந்த பாடம்.

உலக மையத்தில் 
அடிக்கப்பட்ட ஆண்யே
அறபா மைதானத்தில்
எந்தப் பாதமும்
வெந்ததாய் சரித்திரம் இல்லை.
ஒரு வரி கூட 
யாரும் எழுதவும் இல்லை.

உன்னில் வேகப்பந்து 
அருள் மாரி சொரிய முன்
எங்கள் கண்களும்
தெரு மாரி பொழிந்து
அடங்கவில்லை.

அண்ணலாரின் கால்கள்
ஆர்த்தரித்த  பூமியே
உனது ஒவ்வொரு மண்ணும்
தியாகத் துகள்கள் தான்.


                           மூதூர்    சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.






அன்றைய மழைநாள் ......
இன்றைய நினைவலையில்
****************************************.


இரவு முழுவதும்
சோவென பெய்த மழை 
இன்னும் விட்டபாடில்லை..

முன் வீட்டுக் கூரை 
எங்கள் வீட்டு முற்றத்தில்

அப்பா ஆசையாக வளர்த்த
மரங்கள் அடித்த காற்றுக்கு
தாக்கு பிடிக்காமல்
அடியோடு சாய

அதை இழுத்துக் கட்டும் முயற்சியில்
கொட்டும் மழையையும் 
பொருட் படுத்தா 
போராடும் அப்பா...


ஒழுகும் இடங்களுக்கு 
பார்த்துப் பார்த்து 
பாத்திரம் வைத்து 
அலுத்துப் போன அம்மா


படலையில் யாரோ தட்ட
கூரையில் செருகி இருந்த
குடையை மெல்ல திறக்க
குடித்தனம் நடத்தி  இருந்த 
கரப்பான் பூச்சிகள் ...
பாவம்.


மெல்லத் தட்டி
உடைந்த கமபியை
அவசரமாய் சரி செய்ய
முயர்ச்சிக்கும் 
அண்ணா


அடுப்பங்கரையில்
ஊறிக் கிடந்த விறகை
தன்னால் இயன்ற மட்டும்
ஊதித் தள்ளி
மரவெள்ளிக் கிழங் கவித்து
தேங்காய் சம்பலுடன்
ஆவி பறக்க அவித் தெடுத்து
குழந்தைகளின் பசி யாற்றிய
அம்மாவின் பொறுமை.

புத்தக ராக்கையில்...
அடுக்கி வைக்கப்பட்ட
அப்பா எழுதிய 
கதைத் தாள்கள் எல்லாம்
தம்பிக்கு கப்பல் 
செய்து விளையாடும்
மூலப் பொருளாகியது.


வெளியில் நனைவதும் 
கூரைத் தண்ணீரில் 
கூக்குர லிட்டு குளிப்பதும்
அம்மாவிடம் அடி படுவதும்
இந்த சுகம் 
இன்ப சுகம் 
இன்னும் இனிக்கிறது.


முற்றத்தில் நின்ற 
முருங்கை மரம்
பூவும் காயுமாக 
முறிந்து விழுகிறது.


முற்றியும் பழுத்தும்
பளபளப்பாக  காட்சி தந்த
பப்பாசி மரம் 
அடிக்கும் காற்றுக்கு 
முகம் கொடுக்க முடியாமல்
முறிந்து விழுந்ததில்
முகம் சுளித்த அம்மா
இயற்கையை ஒரு நிமிடம்
நொந்து கொண்டாள்.


செருகிய முந்தானை யெடுத்து
முகத்தை துடைத்த படி 
விட்ட பெருமூச்சு
இன்னும் காதில் கேட்கிறது.


ஒழுகும் இடங்களில்
வைத்த பாத்திரங்கள் 
பத்திரமாக 
சத்த நாத மிசைத்து
ஒவ்வொரு வித சந்தமாக
இயற்கையின் இன்பத்தில்
நனைந்தது.

கிழிந்த ஓலைப்பாயில்
சுருண்டு படுக்கும் பாட்டியை
தாத்தாவின் வேட்டி
போர்த்திக் கொள்கிறது


தாத்தாவின் பிரிவின்பின்
பாட்டியின் ஆதரவு எல்லாம்
தாத்தாவின் வேட்டிதான்
அரவணைப்பாக..
தன்னை மறந்து தூங்கும்
பாட்டி..

இன்னும் எத்தனையோ
மழைக்கால நினைவுகள் 


இன்று

வசதியாக சாய்வு நாற்காலியில்
கால்களை மடித்து 
போர்வைக்குள்
 சுருட்டிக் கொள்கிறேன்.
நெஞ்சின் மேல் 
முகம் புதைத்து கிடக்கும்
பேரனைச் சுமந்தபடி
சோ  வென பெய்யும் மழையை
 ரசித்துக் கொண்டிருக்கிறேன்..

அறுபத்தி நான்காம் ஆண்டு
அடித்த புயல் போல் வருமோ
ஆதங்கப் படும் அம்மாவை
அனுதபமாக பார்க்கிறேன்.




இந்த  கவிதையை  1,11,2012, இன்று
லண்டன் வானொலி  வியாழன்
கவிதை நேரத்தில் வாசித்தேன்.
திருமதி சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை..

..