Friday, July 20, 2012

குட்டிக் கவிதைகள்.......





ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
நிறை குறைவாக.

          ( படித்த கவிதை.)



முதுமை
-------------
                   எழுத ஆசை இருக்கு
              பேனாவில்
மை இல்லை.


         இளமை
        ------------
     பேனாவில் மை இருக்கு
       எழுத ஆசை இல்லை.

      கண்ணாடி
----------------
   முதிர்க் கன்னியின்
        முக்கய காதலன்.

          பத்திரிகை
         ----------------
சிரிக்கவும்
    சிந்திக்கவும்
      அதிர்ச்சியடையவும்
      அவமானப் படுத்தவும்
வெள்ளைக் காகிதத்தின் 
    மகரந்தச் சேரக்கை.


     கவிதை
    -------------
    கவிதை சொல்லச் சொன்னான் 
          நான் 
                அவன் பெயரை உச்சரித்தேன்..

எனது கவிதையின் 
முதல் வரி நீதான் 
     மொத்தக் கவியும்
             ஒரே வரிதான்.

    கடைத்தெரு.
       -------------------
அன்று கடைத்தெரு
        இன்று காடைத் தெரு.

பூ  
---
     பள்ளி அறையில்
    கசக்கப் படுவதாலா
         உன்னை பெண்ணுக்கு 
       ஒப்பிடுகிறார்கள்.

                                சுஹைதா ஏ கரீம்.
       


அழகான நாட்கள்...

இன்னும் என் 
  இதயத்தை
இன்பமாக்கி
  ஈரப்படுத்துகிறது
எனது பாட்டி 
வாழ்ந்த வீடு.

வியர்வைத் துளிகளால்
கழிமண் குழைத்து 
கடுமையான உழைப்பால் 
உயரவைத்த கோபுரம்.
ஒவ்வொரு சுவரும் 
வெவ்வேறு கதை கூறும்
கண்கள் கலங்கினாலும் 
உள்ளம் குளிர்ந்து போகும்


எத்தனை இன்பங்கள்
உறவுகளுக்குள் 
அன்புப் பரிமாற்றங்கள்
முற்றத்தில் இருந்து
முழு நிலவை ரசித்தபடி
பாய் விரித்தமர்ந்து
தாத்தா பாட்டி கதைகேட்டு
பாட்டுப் பாடி 
பள்ளாங்குழி  விளையாடி
நிலாச் சோறூட்டி 
உண்டு மகழ்ந்த நாட்கள்

பாதிச் சுவர் வைத்து
பார்த்துப் பார்த்து கட்டியது
வரிசையாய் கம்படுக்கி
கழிமண் குழைத்தழுத்தி
கட்சிதமாய்ச் செய்த மாளிகை
ஓலைக் கூரைக்கிடையே 
ஒளியடிக்கும் 
ஆங்காங்கே
பகலிலும் இரவிலும்
வெசாக் பண்டிகை போல
சூரியனும் சந்திரனும்


'மாலை நிலா 
ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா?'.

பார்துப் பார்த்து
பகலிரவாய் கண்விழித்து
படுத்துறங்க மெத்தை கட்டி
பாய் விரித்தமர 
 படியும் வைத்து
பக்குவமாய் சமைத்த குடில்

பனை ஓலை வேலியும்
படுத்துறங்கும் படிக்கட்டும்
மாளிகையில் கிடைக்காத
மனநிம்மதியும்
மனதை விட்டு அகல வில்லை
கண்ணுக்குள் மாளிகையாய்
கனவில் வந்து போகிறது.

                                            சுஹைதா ஏ கரீம்.
                                         வெள்ளவத்தை.