Saturday, November 3, 2012

கறுப்புக்கல்



தியாக ஆடைகளில்
அந்தரங்கங்களாப் பேசிய நீ

வெள்ளாடைகளோடு 
விருந்திளராய் அழைத்து
ஹாஜிகளை குழந்தையாய் 
பார்த்த கஃபாவுக்குள்

உன் அச்சரத்துக்குள்
தியாக மை ஊற்றிக் கிடக்கிறது

தூரத்து முஸ்லீம் எல்லாம்
திரண்டு வந்து என்று சேர்ந்து
கறுப்பன் வெள்ளையன் என
பாகுபாடு ஏதுமிலா
கவலையுடன் கல்புருகி
கையேந்த தியாக உணர்வை
நெஞ்சுருக நினைத்துப் பார்க்க
வந்த ஹஜ்ஜே


படைத்தவனை நம்பி 
பாலைவனத்தினிலே
தாய் மகவை வைத்து விட்டுச்
சென்ற தோர் தியாகம் 
தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
அன்னை ஹாஜராவின்
பாதங்களைப் பஞ்சாக்கினாய்

கறுப்புக் கல்லாய் நின்று
இப்றாஹிம் நபியின் 
உள்ளத்திற்கு கபனிட்ட வேளை
தியாகமே நீ எழுந்து நின்றாய்.

இஸ்மாயீலைக் குழந்தையாக்கி
இப்றாஹீம் எண்ணத்தை சோதித்தாய்

எல்லைகளைக் கடந்து
இறுகப் பிணைப்புடன்
ஏழை பணக்காரன் என்ற 
பாகுபாடு ஏதுமில்லா
ஆசைகளைத் துறந்து
இரக்கத்தை வலியுறுத்தி
கட்டளைகளை நிறைவேற்ற 
கற்றுத் தந்த பாடம்.

உலக மையத்தில் 
அடிக்கப்பட்ட ஆண்யே
அறபா மைதானத்தில்
எந்தப் பாதமும்
வெந்ததாய் சரித்திரம் இல்லை.
ஒரு வரி கூட 
யாரும் எழுதவும் இல்லை.

உன்னில் வேகப்பந்து 
அருள் மாரி சொரிய முன்
எங்கள் கண்களும்
தெரு மாரி பொழிந்து
அடங்கவில்லை.

அண்ணலாரின் கால்கள்
ஆர்த்தரித்த  பூமியே
உனது ஒவ்வொரு மண்ணும்
தியாகத் துகள்கள் தான்.


                           மூதூர்    சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.






அன்றைய மழைநாள் ......
இன்றைய நினைவலையில்
****************************************.


இரவு முழுவதும்
சோவென பெய்த மழை 
இன்னும் விட்டபாடில்லை..

முன் வீட்டுக் கூரை 
எங்கள் வீட்டு முற்றத்தில்

அப்பா ஆசையாக வளர்த்த
மரங்கள் அடித்த காற்றுக்கு
தாக்கு பிடிக்காமல்
அடியோடு சாய

அதை இழுத்துக் கட்டும் முயற்சியில்
கொட்டும் மழையையும் 
பொருட் படுத்தா 
போராடும் அப்பா...


ஒழுகும் இடங்களுக்கு 
பார்த்துப் பார்த்து 
பாத்திரம் வைத்து 
அலுத்துப் போன அம்மா


படலையில் யாரோ தட்ட
கூரையில் செருகி இருந்த
குடையை மெல்ல திறக்க
குடித்தனம் நடத்தி  இருந்த 
கரப்பான் பூச்சிகள் ...
பாவம்.


மெல்லத் தட்டி
உடைந்த கமபியை
அவசரமாய் சரி செய்ய
முயர்ச்சிக்கும் 
அண்ணா


அடுப்பங்கரையில்
ஊறிக் கிடந்த விறகை
தன்னால் இயன்ற மட்டும்
ஊதித் தள்ளி
மரவெள்ளிக் கிழங் கவித்து
தேங்காய் சம்பலுடன்
ஆவி பறக்க அவித் தெடுத்து
குழந்தைகளின் பசி யாற்றிய
அம்மாவின் பொறுமை.

புத்தக ராக்கையில்...
அடுக்கி வைக்கப்பட்ட
அப்பா எழுதிய 
கதைத் தாள்கள் எல்லாம்
தம்பிக்கு கப்பல் 
செய்து விளையாடும்
மூலப் பொருளாகியது.


வெளியில் நனைவதும் 
கூரைத் தண்ணீரில் 
கூக்குர லிட்டு குளிப்பதும்
அம்மாவிடம் அடி படுவதும்
இந்த சுகம் 
இன்ப சுகம் 
இன்னும் இனிக்கிறது.


முற்றத்தில் நின்ற 
முருங்கை மரம்
பூவும் காயுமாக 
முறிந்து விழுகிறது.


முற்றியும் பழுத்தும்
பளபளப்பாக  காட்சி தந்த
பப்பாசி மரம் 
அடிக்கும் காற்றுக்கு 
முகம் கொடுக்க முடியாமல்
முறிந்து விழுந்ததில்
முகம் சுளித்த அம்மா
இயற்கையை ஒரு நிமிடம்
நொந்து கொண்டாள்.


செருகிய முந்தானை யெடுத்து
முகத்தை துடைத்த படி 
விட்ட பெருமூச்சு
இன்னும் காதில் கேட்கிறது.


ஒழுகும் இடங்களில்
வைத்த பாத்திரங்கள் 
பத்திரமாக 
சத்த நாத மிசைத்து
ஒவ்வொரு வித சந்தமாக
இயற்கையின் இன்பத்தில்
நனைந்தது.

கிழிந்த ஓலைப்பாயில்
சுருண்டு படுக்கும் பாட்டியை
தாத்தாவின் வேட்டி
போர்த்திக் கொள்கிறது


தாத்தாவின் பிரிவின்பின்
பாட்டியின் ஆதரவு எல்லாம்
தாத்தாவின் வேட்டிதான்
அரவணைப்பாக..
தன்னை மறந்து தூங்கும்
பாட்டி..

இன்னும் எத்தனையோ
மழைக்கால நினைவுகள் 


இன்று

வசதியாக சாய்வு நாற்காலியில்
கால்களை மடித்து 
போர்வைக்குள்
 சுருட்டிக் கொள்கிறேன்.
நெஞ்சின் மேல் 
முகம் புதைத்து கிடக்கும்
பேரனைச் சுமந்தபடி
சோ  வென பெய்யும் மழையை
 ரசித்துக் கொண்டிருக்கிறேன்..

அறுபத்தி நான்காம் ஆண்டு
அடித்த புயல் போல் வருமோ
ஆதங்கப் படும் அம்மாவை
அனுதபமாக பார்க்கிறேன்.




இந்த  கவிதையை  1,11,2012, இன்று
லண்டன் வானொலி  வியாழன்
கவிதை நேரத்தில் வாசித்தேன்.
திருமதி சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை..

..

Tuesday, July 24, 2012

ஆணின் அவஸ்தை.

எப்போது புரிவார்கள் ,
எப்படிப் புரிய வைப்பது..
அப்படி இப்படி என்று
சொற்படி நடப்பதை
எப்படிச் சொல்வது.

     தாய்க்குத் தலைமகனாய்
     தலைக்கு மேல் சுமை.
     முடியாது என்றிருந்தால்
     முதற் கோணல் ....
      முற்றும் கோணலாய் ...
     மூத்தவனைத் திட்டுவது.
     நீ......ஒழுங்காய்
     இருந்திருக்கலாம்...

அப்படி என்றால் .....
பெற்றோர்கள் எதர்க்கு.

     தங்கைகளைக் கரைசேர்க்க
     தலைக்கு மேல் விலை பேசி
     தாரவார்த்து விடுவது போல்
     தாரத்தைத் தேடித் திரிகிறார்கள் .
     தரம் ஒன்றும் இல்லை என்றாலும்
     வரம் வந்து முன்னிற்கும்.
     கரம் கை கொடுக்கும்.

பின்னாளின் பிரச்சனைகள்
பிள்ளை ஒன்று வருமுன்னே
தாயைப் பார்ப்பதா .....
தாரத்தைப் பார்ப்பதா....
மாறி மாறி குறைகள்
வந்து குவியும் .
குந்தி இருக்க மனமில்லா
குடும்பத்தை நிந்திக்கச் செய்யும்.

      அன்னைக்குப் பணிவிடை
      அத்தைக்குப் பிடிக்காது
      தாரத்திற்கும் தங்கைக்கும்
      தரம் தாழ்த்தா பிரச்சனை.
      தலை குணிந்தாலும் துன்பம்
      தலை நமிர்ந்தாலும்
      அர்த்தம் பல சொல்லும்....

பெண்களுக்கு மட்டுமல்ல
ஆண்களுக்கும் அவஸ்தைதான் .
புரிந்துணர்வு இருந்துவிட்டால்
புகுந்த வீட்டில் நிம்மதி கிடைக்கும்.

                                                                             சுஹைதா ஏ கரீம்
                                                                                      வெள்ளவத்தை.
     



Friday, July 20, 2012

குட்டிக் கவிதைகள்.......





ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
நிறை குறைவாக.

          ( படித்த கவிதை.)



முதுமை
-------------
                   எழுத ஆசை இருக்கு
              பேனாவில்
மை இல்லை.


         இளமை
        ------------
     பேனாவில் மை இருக்கு
       எழுத ஆசை இல்லை.

      கண்ணாடி
----------------
   முதிர்க் கன்னியின்
        முக்கய காதலன்.

          பத்திரிகை
         ----------------
சிரிக்கவும்
    சிந்திக்கவும்
      அதிர்ச்சியடையவும்
      அவமானப் படுத்தவும்
வெள்ளைக் காகிதத்தின் 
    மகரந்தச் சேரக்கை.


     கவிதை
    -------------
    கவிதை சொல்லச் சொன்னான் 
          நான் 
                அவன் பெயரை உச்சரித்தேன்..

எனது கவிதையின் 
முதல் வரி நீதான் 
     மொத்தக் கவியும்
             ஒரே வரிதான்.

    கடைத்தெரு.
       -------------------
அன்று கடைத்தெரு
        இன்று காடைத் தெரு.

பூ  
---
     பள்ளி அறையில்
    கசக்கப் படுவதாலா
         உன்னை பெண்ணுக்கு 
       ஒப்பிடுகிறார்கள்.

                                சுஹைதா ஏ கரீம்.
       


அழகான நாட்கள்...

இன்னும் என் 
  இதயத்தை
இன்பமாக்கி
  ஈரப்படுத்துகிறது
எனது பாட்டி 
வாழ்ந்த வீடு.

வியர்வைத் துளிகளால்
கழிமண் குழைத்து 
கடுமையான உழைப்பால் 
உயரவைத்த கோபுரம்.
ஒவ்வொரு சுவரும் 
வெவ்வேறு கதை கூறும்
கண்கள் கலங்கினாலும் 
உள்ளம் குளிர்ந்து போகும்


எத்தனை இன்பங்கள்
உறவுகளுக்குள் 
அன்புப் பரிமாற்றங்கள்
முற்றத்தில் இருந்து
முழு நிலவை ரசித்தபடி
பாய் விரித்தமர்ந்து
தாத்தா பாட்டி கதைகேட்டு
பாட்டுப் பாடி 
பள்ளாங்குழி  விளையாடி
நிலாச் சோறூட்டி 
உண்டு மகழ்ந்த நாட்கள்

பாதிச் சுவர் வைத்து
பார்த்துப் பார்த்து கட்டியது
வரிசையாய் கம்படுக்கி
கழிமண் குழைத்தழுத்தி
கட்சிதமாய்ச் செய்த மாளிகை
ஓலைக் கூரைக்கிடையே 
ஒளியடிக்கும் 
ஆங்காங்கே
பகலிலும் இரவிலும்
வெசாக் பண்டிகை போல
சூரியனும் சந்திரனும்


'மாலை நிலா 
ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா?'.

பார்துப் பார்த்து
பகலிரவாய் கண்விழித்து
படுத்துறங்க மெத்தை கட்டி
பாய் விரித்தமர 
 படியும் வைத்து
பக்குவமாய் சமைத்த குடில்

பனை ஓலை வேலியும்
படுத்துறங்கும் படிக்கட்டும்
மாளிகையில் கிடைக்காத
மனநிம்மதியும்
மனதை விட்டு அகல வில்லை
கண்ணுக்குள் மாளிகையாய்
கனவில் வந்து போகிறது.

                                            சுஹைதா ஏ கரீம்.
                                         வெள்ளவத்தை.









Wednesday, June 13, 2012

எதுவும் பேசாதே

எதுவும் பேசாதே
*****************



நீ நினைத்ததை முடிக்க
தீர்மாணித்து விட்டாய்
கொஞ்சம் கூட
 யோசிக்காமல்
உன் எண்ணம் 
உன் கால் 


பயனிப்பவன் நீ என்பதாலா
எதுவும் கேட்க வில்லை
சொல்லி விட்டேன்
இனியும் என்னிடம்
எதுவும் பேசாதே

உன் கனவு 
உன் வாழ்க்கை 
உணர்ந்து செயல் படு 
எனைச் சாராதே

உன் வருமானம் 
உன் அகிம்சா வாதம்
எதையும் என்னிடம்
விமர்சிக்காதே

உன் கூற்று உனக்கு 
சரி என்றால்
ஒன்றுக்கு பலதடவை
சிந்தித்து இருக்கலாம்

உனக்கு தெரியும்
 எத்தனை முறை
புத்தி புகட்டி இருப்பேன்
முன்னேற வழி காட்டியிருந்தேன்

எனை உதாசீனம் செய்து
எதில் முன்னேற்றம் 
கண்டாய் சொல்
எதையும் கேட்காமல்

இனியும் எதுவும் பேசாதே
என்றாவது ஒருநாள் 
எனை உணர்வாய் 
அன்று 
நானிருந்தால்.....

மீண்டும் வருவாய் 
என்னிடம்
ஆறுதலாய் வா 
ஆலோசனை தருகின்றேன்

இனியும் என்னிடம் 
எதுவும் வேசாதே
ஒன்றைப் புரிந்து கொள்
நீ 
முதிர்ந்த அறிவு செறிந்தவனாய் 
இருந்தபோதும்
ஆலோசனையில் 
அலட்சியம் வேண்டாம்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை






Tuesday, June 12, 2012

கனவு





இன்றும் பாதித்தூக்கத்தில்
துயில் எழும்புகிறேன்
அன்று பறிக்கப்பட்ட
எங்கள் உடமைகளும்
உணர்வுகளும் 
இன்றும் பாம்புகளாகி
கணவில் கூட 
கொத்துகிறது.

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.

வரம் ஒன்று வேண்டுகிறேன்


பிஞ்சி மொழி பேசி 
கொஞ்சி விளையாட
எனக்கு ஒரு வரம் வேண்டும்
இறைவா  அதை நீ தரவேண்டும்

பிஞ்சுக் காலால் நெஞ்சுதைத்து
பிளந்த வாயால் புன்னகை பூத்து
அள்ளி நானும் அணைத்திடவே
எனக்கு ஒரு வரம் வேண்டும்

மலடி என்றென்னை 
வையகத்தார் தூற்றாமல்
தயவுடனே வேண்டுகிறேன் 
தந்தருள்வாய் வரம் ஒன்று

அம்மா என்றழைத்திடவே 
அணைத்து நானும் மகிழ்ந்திடவே 
குறும்பாய் எனைக் கழைந்திடவே
குழந்தை வரம் தந்திடுவாய்

பள்ளி சென்று பயின்றிடவும்
பாரில் நலன் புரிந்திடவும்
இருகை யேந்தி வேண்டுகிறேன்
இறைவா எனக்கோர் வரம் தருவாய்

புகளுக்காக அல்லாமல் 
பிறர் தூற்றாதிருக்க வேண்டுமென
பத்துமாதம் சுமந்து பெற 
பகலிரவாய் வேண்டுகிறேன்

உன்னால் முடியாது ஏதுமில்லை 
என்னாறைவா
ஊர்டமத்தும் பழி கேட்டு 
என்னமாய்க் கொதிக்கிறது
 எனதுள்ளம்
அறிவாய் நீயே என்னிறைவா 
அன்பாய் எனக்கு அருள் புரிவாய்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை 


வாழ்க்கை



சின்னதாய ஒரு சந்தோஷம் 
சின்னதாய் ஒரு சஞ்சலம் 
சின்னதாய் ஒரு கோபம்
சின்னதாய் ஒரு விரக்தி
சின்னதாய் ஒரு கவலை
சின்னதாய் ஒரு எரிச்சல்

இத்தனையும் நாளுக்கு நாள்
இதயத்தில்
இட்களுக்கும் இன்னல்களுக்கும்
முகம் கொடுத்து 
மொத்தமாக சிரித்துக் கொள்கிறேன்
எனக்குள் .
நாளைய நாளின் 
நம்பிக்கையில் , , 

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை 





Friday, June 8, 2012

கனவில் ஒருபிடி அள்ளி........




கானுகின்ற கனவினிலே 
எதுவும் வரலாம்
கழிப்பான கனவென்றாலும்
விழிப்பாக இருக்க வேண்டும்.

சலிப்பாக இருந்தாலும் 
செழிப்பாக நினைக்க வேண்டும்
பயமும் வரலாம்.பணமும் வரலாம்
பயமுறுத்தலும் வரலாம்

கனவினிலே எதுவும் வரலாம்
கனவு காணுங்கள் 
தூக்கத்தில் மட்டுமல்ல
விழிப்பிலும் காணுங்கள்.

இறுக மூடியிருந்த...
என் இரு விழிகளுக்குள்
நேற்றிரவு வந்த கனவு 
இது....அதில் வந்த சேதி இது

கனவுலகில் வாடுகின்ற
முதிர்க் கன்னியரின்கவலைகளை
நினைவுகளில் கோர்த்தெடுத்து
கண்ணீர்த் திவளை தீர்ப்பதர்க்கு
தின வெடுத்த தோள் எடுத்து
துணிந்து வரும் காளையர்க்கு
மண மகளாய் வாய்ப்பதர்க்கு -நல்ல
வேளை வரும் நாளை என்று
வந்து சொன்ன காளையை
 நான் தேடுகிறேன்,,

மீண்டும் கண்களை மூடுகின்றேன்
அவன் வரவை நாடுகின்றேன்

சொன்னவரின் வார்த்தைகளை
தொகுத்தெடுத்து யோசித்தேன்

வறுமையிலே வாடுகின்ற 
வடிவான குமரிகளை
பொறுமை மிகு குணவத்யை
பொன்னகையை நாடாமல்
புன்னகையைத் தேடிவரும்
கண்ணிறைந்த கணவனென
ஏழைக் குமரெல்லாம் போற்றுகின்ற
நல்ல தொரு எதிர்காலம்
நாளை வர வேண்டுமென
உள்ளத்தில் உள்ளதனை 
உணர்த்தபடி அவன் சென்றான்.

நேற்று நான் கணவில் கண்டவனை
நல்ல கல்புறுதி கொண்டவனை
இன்று ஓலைக்குடிசையிலே
ஒடுங்கி அழும் குமரியெல்லாம்
நனவினிலே கண்டு
மணமுடித்து மகிழ்வதர்க்கு
ஏகனவன் துணை புரிய 
இருகை யேந்துகிறேன்

இது போன்ற கனவுகளே 
இனி வரும் நாள் நினைவாக
எதிர்கால சந்ததிக்கு 
இதையெத்தி வையுங்கள்

கனவுலகில் வாழாமல்
கற்பனையில் மூழ்காமல்
மன உறுதி கொண்டவராய்
பணம் .உறுதி .கல்வீீடு
பொன் பொருளை நாடாமல்
மகர் கொடுத்து மணமுடிக்கும்
மனவுறுதி பெற்றிடுங்கள்

ஊரிலுள்ள காளையரில் 
ஓரிரு உள்ளங்கள் சிந்தித்தால்
உருப்படும் நம் சமூகம்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை





தேடுகிறேன்...............

இந்தக் கவிதை பொதிகைத் தொலைக்காட் சியில் வாசித்தேன்.
கவிஞர் வேலு வேந்தன் இதைப் பாராட்டினார்...........




தேடுகிறேன் .
சின்ன வயதில் சிரித்துப் பேசி
சிப்பி சிரட்டை விளையாடியது
சினம் கொள்ளாப் பாசமுடன் 
பழகிய 
நேச உள்ளங்களைத் தேடுகிறேன்

அமைதியாய்ப் புலரும் தாலைப் பொழுது
சஞ்சலமே இல்லாத மன அமைதி
சாதி மத பேதமில்லை எங்களுக்குள்
ஏற்ற  தாழ்வும் இருந்ததில்லை

நாட்டில் அமைதி இல்லை 
நிம்மதியாய் நித்திரை இல்லை
நித்தமும் கவலையுடன் 
நிம்மதியைத் தேடுகிறேன்.

நலிந்து போன மானிட வாழ்வில்
மானிடமே மரணித்துப் போய்
மலிந்து விட்ட ரீச்செயல்கள்
மறைந்து போகும் நாளைத் தேடுகிறேன்.

வஞ்சனை சூது கொலை களவு
காம இச்சை கயவர் கைவரிசை
நாசகாரச் செயல்கள் என்றும்
ஒழிந்து போகும் நாளைத் தேடுகிறேன்.

ஒற்றுமையான உறவுகள்
ஆபத்தில் உதவும் நன்பர்ள்
அல்லலின் போது அரவணைக்கும் கரங்கள்
அவனியில் உண்டா தேகிறேன்.

தொலைந்து போன .சமாதானம்
சாகடித்த சந்தோஷங்கள்
ஓடி மறைந்த ஒற்றுமைகள்
ஒன்றினைந்து நிலைத்திடுமா.

இனிவரும் காலத்தில் 
இழந்து விட்ட இன்பங்கள்
இனி வருமா தேடுகிறேன்.


மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை









அணர்த்தம் தந்த அலைகடலே




வாசலுடன் வந்து நீ எங்கள் 
பாசங்களை அல்லவா
பிரித்து விட்டாய்

அணர்த்தம் தந்தாய் 
அதில் ஆனந்தம் 
கண்டாய்

ரணங்களாய்ப் பிளிந்து

மனிதனைப் பிணங்களாய்
நடைப்பிணமாய்
நஞ்சூட்டப் பட்டவராய்
அனாதையாய்


அகதியாய் அனாதரவற்ற 
விதவையாய்
எத்தனை இழப்புகள்

ஏ கடலே 
உன்கரையில் நாங்கள் 
சிப்பிகளைப் பொறுக்கித்தானே
சேகரித்தோம்

ஆனால் நீ
தரையைத் தொட்டபோது
நாங்கள் 
உயிரற்ற உடலைத்தானே
பொறுக்கினோம்

ஏழைகளின் வாழ்வில் 
உயர்வை தந்த நீ
ஏன் ஆவேசம் கொண்டாய்

தொட்டுச் சென்ற சுனாமியே
நீ எடுத்துச் சென்றது போதுமே
பொறுக்கியது அத்தனையும் 
பொக்கிஷங்கள் அல்லவா

பாவம் அவர்கள் 
பாவப்பட்ட ஜீவன்கள்

அத்தனையும் ஒரு நொடியில்
ஒரே மூச்சில்
உன் பசிக்கு இரையாக்குவதுல்
என்ன சுகம் கண்டாய்

ஏ கடலே 
வேண்டாம் இன்னுமொரு 
கோரப்பசி உனக்கு
உன்னில் போராடித்தானே 
பலரது வாழ்க்கை உயர்வானது
ஆனால் நீயோ 
அனைவர் வாழ்விலும்
ஆட்டம் தந்து விட்டாயே

ஒரு நொடியில் 
ஒரே மூச்சில்
அனாதையாக்கப் பட்டு 
அகதியாக்கப்பட்டு
ஆடைகள் இன்றிப் போனதினால்
மானம் இழந்த ்க்கள் 
மயிரிழையில் உயிர் தப்பியும்
மன நோயாக்கப்கட்டு
எத்தனை இன்னல்கள் 


இறைவன் நாட்டம் 
இதுவே என்றால் 
இன்னுமோர் சுனாமி
இனியும் வேண்டாம்.


மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.























எதிர் பார்ப்பு





காலைப் பொழுது 
எப்போது விடியும்
விரக்தியின் விழிம்பில்
விரைந்து செல்கிறது 
வாழ்க்கை

யன்னல் கம்பிகளினூடே
என் பார்வை 
தொலைவை நோக்கியபடி
இரவையும் நிலவையும்
எத்தனை நாட்களுக்கு
ரசிப்பது


சில சமயம் வானுக்கு கூட
என் பார்வை
வெறுக்கிறதோ
வெண்ணிலவை 
கரு மேகத்தால் 
போர்த்திக் கொள்கிறது

என் சித்தியைப் போல
பாதையில் செல்பரை 
நான் பார்த்து விடுவேனோ
என்ற அச்சத்தில்
யன்னல் திரைச் சீலையை
மூட்விடுவது போல்

புது விடியலுக்காய்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்து போனேன் 
இல்லை...
எனை ஏமாற்றிக் கொண்டேன்

பருவ வயதை எட்டி
பலவருடம் போனபின்னும்
சீதனச் சந்தையில்
விலைபோக முடியாமல்
பலர் முன் காட்சிப் பொருளாய்
அலங்கரிக்கப் பட்டு 
அவமானப் பட்டு
இன்னும் முதிர்க் கன்னியாக
முடங்கிக் கிடக்கிறேன்.



மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை

குட்டிக் கவிதைகள்

கண்ணீர்த் துளி

இன்னும் என்னிடம்
மிஞ்சியிருப்பது
இதுமட்டுமே

உன் பிரிவின் பின்னால்


இரட்டை வேடம்
------------------------
மனிதர்களில் 
இவர்கள் தான்
மேலானவர்களாக
மதிக்கப் படுகிறார்கள்
பசுத்தோல் போர்த்திய
புலியாக..


முகமிழந்த முகவரி
********************
சுதந்திரம் கிடைத்த பின்னும்
முகமிழந்து
முகவரி தொலைத்தவர்களாய்
அகதி முகாம்களில்
அடங்கிக் கிடக்கிறோம்.


வயிற்றுப் பசி
***************
தெருவோரப் பிச்சைக் காரனுக்கும்
மாடி வீட்டுப் பணக்காரணுக்கும்
இறைவன் கொடுத்த தண்டணை
வயிற்றுப் பசி.


இளமை
********
நேற்றய நாளின்
தொலைந்து போன 
நிகழ்வுகள்..


நட்பு
******
ஹலோவுக்கு 
பின் 
காணாமல்
போனவர்கள்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.

அடுத்த வாரிசு

எண்ணை காணாத கேசம்
மெய்யை பொய்யாய்
மறைத்தபடி

சரிந்துவிழுந்த முந்தானையை
சரி செய்ய முயல்கிறாள்
சில தெருவோர
கழுகுகளின் பார்வையில்
இரையாகும் அவள் மேனி
உறைந்து போன
உணர்வுகள் புரியாமல்


பின்னால் சினுங்கிய படி
மூக்கிலிருந்து
வழிந்த நீரை
புறங்கையால் தேய்த்தபடி
அன்னையின் பின்னால்
அடியெடுத்து 
அவஸ்தைப் படும்
பால் முகம் மாறா 
பிள்ளை

தாய் கையேந்த 
தனயனின் பார்வையில்
அனாதையாய்
அன்னாந்து நோக்க..
அவன் கைகளுக்குள்ளும் 
சில்லறைகள் விழுகிறது

தலைமுறையாய் 
அவன் தொழிலுக்கும்
ஆரம்ப வித்தாகிறது..


மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை

Monday, May 21, 2012

எமது நாடு . ..





எங்கள் நாடு இலங்கையதாம்
இந்து சமுத்திரம் மத்தியிலாம்
இந்திய நாட்டுக் கண்மையிலாம்
இலங்கும் எங்கள் தாய்நாடாம்

சிங்கள தமிழர் முஸ்லீம்கள்
சிறப்பாய் வாழும் நம்நாடு
மலை வளம் கொழிக்கும் எம்நாடு
மன்னர்கள் ஆண்டிட்ட நன்னாடு

அலைகடல் சூழ்ந்த எம் நாட்டில்
ஆறுகள் பாய்வதும் இன்னாட்டில்
தேயிலை ரப்பர் கொக்கோவும்
தெங்குப் பொருட்களும் இங்குண்டு

இயற்கை வளங்கள் நிறைந்திட்ட
இலங்கா புரியை போற்றிடுவோம்
வறுமை நாடாய் இல்லாமல்
வளம் கொளிக்கச் செய்திடுவோம்.

தரிசாய்க் கிடக்கும் நிலங்களையும்
தரமாய் விளைநிலமாக்கிடுங்கள்
உழைத்து வாழ்வதே உயர்வென்று
உயர்த்திப் பார்ப்போம் நம்நாட்டை . ..

மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.


Thursday, May 17, 2012

திடீரென வரும் விருந்தாளிகளை உபசரித்தல்





திடீரென உங்கள் வீட்டிற்கு சொல்லாமல் விருந்தினர் வந்து விட்டால் . . .முதலில் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலி , தொலைக்காட்சியின் சப்தங்களை நிறுத்துங்கள் . . .. ..அவர்களை அன்பாக அழைத்து உட்கார வைத்து 
அருகமர்ந்து சுகநலம் விசாரியுங்கள். அவர்கள் வந்திருக்கும் நேரம் பார்த்து 
குளிர்பானமோ  அல்லது சூடாகவோ பருகக் கொடுங்கள் . . . . . .அத்துடன் அந்த
நேரத்தில் இருக்கும் உணவுப் பண்டங்கள் கொடுத்து உபசரியுங்கள் . . . அறைக்குள் இருந்து அட்டகாசப் படுத்தும் குழந்தைகளை அடக்கி அமைதிப் படுத்தி விடுங்கள் . . . .அமைதியாகப் பேசுங்கள் .....நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சங்கடப் படுத்த விடாதீர்கள் ...பேசும் போது அவர்கள் பேசுவதைக் கேழுங்கள் ..உங்கள் வீட்டுக் கதைகளையும் உங்கள் பிள்ளைகளையும் பெருமைப் படுத்தி பேசிக் கொண்டிருக்காதீர்கள்......
உங்கள் இரு வீட்டாரின் கதையை விட
மூன்றாமவரின் கதையை பேச எடுக்காதீர்கள்..இப்போதெல்லாம் .இருவர் . . .  . . சேர்ந்தால் வீட்டுக் கதையை விட தொலைக்காட்சி நாடகங்கள்தான் . . .  . . . . . . . . பேசப்படுகிறது..உங்கள் பிள்ளைகளின் குறைகளை பிள்ளைகளை முன் . . . . . . . . .. வைத்து க்கொண்டு  சொல்லாதீர்கள் பிள்ளைகளை கேலிக்கைக்கு . . . . . . . . . . . . .  ..ஆளாக்காதீர்கள்        .அடிக்கடி நேரத்தைப் பார்க்காதீர்கள்...நீங்கள் பேசும். . . . .. . போது உங்கள் பேச்சிற்கு செவி மடுக்கிறார்களா என்று அவதானித்துப்.  . . . . . .  பேசுங்கள் . . சத்தமிட்டுப் பேசாதீர்கள் . .சத்தமாக சிரிக்காதீர்கள் . .பேச்சில் நிதானம் தவறாமல் பேசுங்கள்... .  .சொல்லாமல் வந்ததினால் சில அசெளகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம் அதை அவர்களிடம்  எடுத்துச் சொல்லுங்கள் .......திடீரென வந்ததினால் நன்கு கவனிக்கப் படாததை  சொல்லுங்கள்...இன்னொரு முறை வாருங்கள் என்று அன்புக்கட்டளை இடுங்கள்.....

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தையில் இருந்து
.

Wednesday, May 16, 2012

முதிர்ந்தும் முதிராத . . . . . . . .



நாங்கள் மூப்பெய்தி விட்டோம்.
அதனால் . ......
அனாதையாக்கப் பட்டோம்.
எங்கள் ஆசைகள் 
தேவைகள் எல்லாமே.......................
அடக்கு முறைக்குள்....
பேசா மடந்தையாக. . . . . . . . . .  ......
மொளனித்துப் போகின்றோம்
பாதுகாப்பு  பிள்ளைகள்
..... என்பதால்.......


பெற்ற பிள்ளையுடனும்
பேரக் குஞ்சுகளுடனும்
கொஞ்சி விளையாட ..
ஆசைதான் எங்களுக்கும்
ஆனால் வீட்டில்
அனாதையாக்கப்பட்டோம்


மூன்று நேர உணவும் உடையும்
தாராளமாக கிடைத்தாலும்
முதியோர் இல்லங்களில் ............
முடங்கிக் கிடக்கின்றோம்.


இறந்த காலத்தை இரைமீட்டி
பிள்ளைகளின் ....
உயர்வு கண்டு.பூரித்து நிற்கின்றோம்
எங்களுக்குள்ளும்
ஆசைகள் தேவைகள்
எல்லாமே நிறைந்து கிடக்கிறது


சின்னஞ் சிறார்கள் போல
அன்பிற்காய் ஏங்கும்
அனாதைகள் நாங்கள்
இன்று 
முதிர்ந்தும் முதியாதவர்களாக
அனாதை இல்லங்களில்
பிள்ளைகளின் நலனுக்காய் 
பிராத்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை......

கனவு

அந்த தெருவோரப்  பிச்சைக்காரனும்
பணக்காரன்
சொப்பணக்காரன்

Sunday, May 13, 2012

காத்திருப்பு...



எத்தனை இரவுகள்
ஏங்கி ஏங்கி விழித்திருப்பேன்
இரவின் நிசப்த அமைதியில்
என் இதயத்தின் ஓசை மட்டும்
ஓங்கி ஒலித்த நாட்கள்...
எனக்காகவா நான் வாழ்ந்தேன்...?


இப்போ...எதற்காக நான் வாழ்கிறேன்
புரியாமல் தடுமாறுகிறேன்
விதி என்ற இரு வரியை
நொந்து கொள்வதெப்படி...?

கலையும்,கற்பும் கை தவறி போகாமல்
கனத்த பொறுமையுடன்
புன்னகை பூத்தவளாய்
புவியில் உலாவி வந்தேன்
என்னை புரிந்தவர்கள் எத்தனை பேர்...?

ம்...புரிந்தவரே,பிரிவானபோது
பூ நான் என்ன செய்வேன்..?
இதயத்தில் இடம் பிடித்தவனை
இடைமறித்து பறித்தெடுத்தார்
படித்துவிட்டு தந்து விடு
பாசம் என்ன பட்டறையா...?

என்னவனே..?
நீ உன் நினைவுகளை மட்டும்
எனக்குள் நூதனசாலையாக்கிவிட்டு
இன்னோர் இதயத்தில் குடியிருப்பது
என்ன ஞாயமோ..?நானறியேன்...?
நியாயமானது என
உன் மனது துடிக்கும் போது
உணர்ந்து கொள்வாய் என் அன்பை
அதுவரை,
என் காத்திருப்பு நிலைத்திருக்கும்....!

-மூதூர் சுஹைதா. ஏ. கரீம்-


Wednesday, May 9, 2012

இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டால்......





. .
இன்பமான இல்லாழ்வு வாழ வேண்டுமானால்.கணவன் மனைவி புரிந்துணர்வு
அவசியம் . . .அத்துடன் மிக மிக முக்கியமானது பணம் . .. பணம் இன்றேல் பிணம் தான் . . .என்று சொல்வார்களே . .. ஆமாம் அதில் எத்தனை உண்மை இருக்கிறது . . . .இப்போதெல்லாம் பணம் உள்ளவர்கள் தான் மதிக்கப் படுகிறார்கள் . . ..நேசிக்கப் படுகிறார்கள் . . .பணம் இன்றி வாழ முடியாத நிலை
உறவுகள் எல்லாம் சற்றுத்தொலைவில் தான் . . ..

எவ்வளவு தான் உழைத்துப் போட்டாலும் வருவாய்க்கு மேல் செலவாகத்தான்
இருக்கிறது , , ,உண்மைதான் . ..  கணவன் மனைவி இருவர் உழைத்தும் வருமானம் போதாத நிலை . வாழ்க்கைச் செலவு அதிகரித்து விட்டது , , நவ நாகரீக மோகம் தலைக்கு மேல் ஏறிவிட்டது . . ஒருவர் போல் மற்றவர் வாழ வேண்டும் என்ற ஆசை . .. இதனால் தீய வழியில் சம்பாதிப்பு . .. மனித தேவைகளைப் பூரர்த்தி செய்ய மனிதன் இயந்திரமாகின்றான் . . ஆயிரம் ரூபாய்
வருமான முள்ளவன் ஐயாயிரம் ரூபா செலவிருந்தால்.அவன் குடும்ப நிலை என்னாவது . . . கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை மிச்சப் படுத்த தெரிய வேண்டும் . . .இதில் கணவன் மனைவி இருவருமே கலந்து ஆலோசித்து
எதில் சிக்கனப் படுத்துவது எப்படி.ச் ேகரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . . . ..பிள்ளைகளுக்கும் இதை உணர்த்த வேண்டும் .  . .

நான் உழைகத்ததெல்லாம் ஊதாரியாக்குகிறாள் மனைவி என்றும் . . . .கணவன் சம்பாதிப்பதில் பாதிதான் வீடு வருகிறது  மீதியை கணவன் குடிததுத் தள்ளுகிறான் என்று மனைவியும் இருந்து விட்டால் . . .எப்படி வாழ்வில் முன்னேற முடியும் . . .

வாழ்க்கையில் முன்னோற குறிக்கோள் இருக்க வேண்டும் . . . .இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கட்டுக் கோப்பு வரையறை இருக்க வேண்டும்
முதல் மாதத்தில் கொஞ்சம் செலவாகி விட்டது என்றால் அடுத்த மாதத்தில்
தேவையற்ற செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் . . .
இப்போது இருக்கும் நிலையில் எதில் கட்டுப் படுத்துவது .....என்று கேட்கலாம் . . சாப்பாட்டிலா  . .உடையிலா பிள்ளைகளின் பாடசாலை செலவிலா . . ..
எதிலுமே சுருக்க முடியாத நிலை . .. . இதில் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை . .சங்கடம் தான் . . . .

பிள்ளைகளுக்கு சத்தான உணவு தாராளமாகக் கொடுக்கலாம் .குறைந்த விலையில் நிறைந்த உணவைக் கொடுக்கலாம் . .பிள்ளைகளுக்கு ஆடம்பர
வாழ்க்கையைக் காட்டாமல். .வரவு செலவுகளை வளர்ந்த பிள்ளைகளிடம்
பகிர்ந்து கொள்ளலாம் . . ..

புகைத்துத் தள்ளும் கணவன் .சூதாட்டத்தில் பணத்தை தொலைக்கும் ஒருவர்க்கம் . . . . சிற்றுண்டிச் சாலையில் கணக்கை ஏற்றி வைக்கும் கணவன் . .இவர்களின் வீண் செலவைக்குறைக்கலாமே . .. . வீட்டில் வீணே எரியும் மின்சாரம்.நீர் .தொலைபேசி. . . இவைகளை கட்டுப்படுத்தலாம் . . ..பெண்கள் வீட்டில் இருந்த படி தனக்குத் தெரிந்த கைத்தொழில் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் . . . .. .ஒரு பெண் ஒரு குடும்பத்தை சுபீட்சத்தின் இருப்பிடமாக கொண்டு வரலாம் . . .. . ஒருவனுடைய சுபீட்சத்தின் ஆணி வேர்
அவனுடைய மனைவியே . . .

உலகில் பணக்காரனாவதர்க்கும் பணக்காரனாய் வாழ்வதர்க்கும் .ஒரே வழி
பணத்தை ஊதாரித்தனம் செய்யாமல் . . .சிறுகச் சிறுகச் சேமித்து சீராக வாழலாம் . .. சேமிப்புப் ுழக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் . . .பிள்ளைகளுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . .இருப்பதில் திருப்தி கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும் . . ..

             
மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை . 

Tuesday, May 8, 2012

தூரமான வாழ்க்கை . . ..



காலைப் பரபரப்பு . ...
இயந்திர மான வாழ்க்கை
உழைக்க வேண்டும் என்ற வேட்கை
நாடுவிட்டு நாடுவந்து . . .
உறவுகளைப் பிரிந்து . .
உணர்வுகளைத் தொலைத்து . . .
எத்தனை நாட்களுக்கு   . .
இந்த தனிமை அவஸ்தை . . ..

அழகான நாடு  .. ..
அற்புதமான கலையம்சம் . .. .
தாரளமான உணவு . ..
உல்லாசமாய் இருந்தாலும்
மனமகிழ்வு இங்கில்லை. . .
எல்லாமே தூரமான நிலையில் .  ..

உறவுகளிள் திருமணங்கள் ..
சொந்தங்களின் சோக நிகழ்வுகள் .. . .
எல்லாவற்றிலும் இரவிரவாய் .. .
கண்விழுத்திருந்த நாட்கள் . . .இன்று
தொலைதூரம் இருந்து கொண்டு
தொலைபேசியில் இன்பதுன்பத்தை
இரு வரியில் உரையாடுவதில்
என்ன சுகம் இருக்கிறது . . . .

வாரத்தில் ஒரு நாள்
விடுமுறை கிடைத்தாலும்
எவ்வொரு நண்பனினதும்
வெவ்வேறு சோக நிகழ்வுகள்
சேர்ந்திருந்து எங்களை
நாங்களே தேற்றிக் கொள்கிறோம்..

உல்லாச வாழ்க்கை வாழ்வதாய்
ஊரிலுள்ளோர் நினைத்தாலும்
ஊர் வந்து சேரும்போது  ..
விடுதலை கிடைத்ததாய்
பூரித்துப் போகிறோம் . . .. .
உறவுகளின் முகங்களைக் கணடதும்
உயிர் பிழைத்ததாய் உணருகிறோம் . ..
இதயம் நொந்து கொள்கிறோம். . .. .


தூரமான வாழ்க்கை ........
என்றும் துயரம் தான் . . ..

மூதூர் சுஹைதா ஏ கரீம்...
வெள்ளவத்தையில் . இருந்து .

இவன். ... .



வாழ்க்கை என்றால் வரவு செலவில்ஒன்றில்லை
வளர் பிறையும் முடிவின்றி வருவதில்லை. . ..
சாதனைகள் தொடராக நிலைப்பதில்லை . . . . .
சாதி சன ஒற்றுமையும்  சத்தியமாய் நிலைப்பதில்லை .


உறவுகளுக்குள் ஓயாப் போராட்டம்
ஊடுருவிப் பார்த்தால் . ..
பொறாமையங்கே தலைவிரித்தாடும். . .
குன்று குழி நிறைந்தது தான் வாழ்க்கை
பெருங்குடி மகனாய் வாழ்வதென்றால்
வீழ்ந்து அதில் மீள வேண்டும் . . . . .

கவிஞன் என்றால் ஏழை என்பார் . . .
கற்பனையில் ஏவழயல்ல அவன் . .
வித்தகனாய் மாறுதற்கும் . .
முழு உலகம் பார்ப்பதற்கும் . ..
பஞ்சமில்லைா வார்த்தைகள்  . .
கற்பணையில் ஊற்றெடுக்கும் . . . . .

இருந்தும் அவனை வையம் வையும்
சொர்க்கத்தைக் காண்பவனும்
சொத்து சுகம் சேர்ப்பவனும்
தொலைந்து போன நினைவுகளை
தொடர் காவியமாய் தருபவனும்
உள்ளக் கிடக்கைகளை
உவமையுடன்.சேர்ப்பவனும்
கள்ள மில்லா உண்மையெலாம்
கட்சிதமாய் வடிவமைத்து
உணர்வுகளுடன் உறவாடி
உயிர்ப்பித்து அழகு பார்த்து
உணர்த்தசுபவன். . . . .இவன் ..

..................கவிஞன்.............

மூதூர் ......சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தையில்  இருந்து. . . . .



 

Monday, May 7, 2012

ஆறாத வடுக்கள் .........





பல இரவுகளில் தனிமை 
எனைத் தத்தெடுத்துக் கொள்கிறது . ...
கனவுகள் இல்லாத . . .
கடைசித் தூக்கத்தில் கூட . . .

நினைத்துப் பார்க்கிறேன்.
நெஞ்சு கனக்கிறது . . . 
ஏன் இவர்கள் . . .. . . 
இப்படி நடந்து கொண்டார்கள் . . .. .

எனக்கென யாருமில்லையென
அழுத போதெல்லாம் . . . .. 
ஆதரித்த அன்புள்ளங்கள்...
ஏன் எனை வஞ்சிக்கிறார்கள் . .. .

நனவுகளில் ஏற்பட்ட..
ஊமைக் காயங்களுக்கு..
கனவுகளில் தான் ...
மருந்திடப் பார்க்கிறேன் . . . ..

துயரங்களில் போது
ஏற்பட்ட தனிமையும் . . .
தனிமையின் போது
ஏற்பட்ட துயரமும் . . .

நினைத்துப் பார்க்கிறேன் . .
எனக்குள் தாழ் இட்டுக் கொள்கிறேன்....
பாவிகள் வாழ...
அப்பாவிகள் வீழ்கிறோம்,,,

ஏழைகள் எமக்கு ......
வெளிச்சம் போட...
சமூதாய நாவுக்குப் பயந்து
ஊமையாய் அழுகிறேன் . . .

இப்போது என்னிடம் 
மிச்சமிருப்ப தெல்லாம் . .
ஒழுங்கற்ற நினைவுகளும்
இரத்தம் சொட்டும் வார்த்தைகளும் தான் . . .

மூதூர்....சுஹைதா ஏ கரீம்






ஊண மனங்கள். . . .



வைத்தியர்கள் கடவுளுக்குச் சமம்
இறைவனுக்குச் சமம் .என்கிறோம்.
வைத்தியரை வாகை சூடுகிறோம்.
அந்த வைத்தியரிடமே பணம் .......
பேசப்படா விட்டால் . . ... . .
பிணமாகத்தான் திரும்புவோம்

சுஹைதா ஏ கரிம் .
வெள்ளவத்தை.


Friday, May 4, 2012




(மூமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள். அல்குர்ஆன் 24:56
    மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் “அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்” என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
    (நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44
    என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக “தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!” என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல.
   

வேண்டாம் இந்த வரன்...........



விலை கொடுத்து வாங்கி வைத்து 
வினோதமாய்க் குடும்பம் நடத்த..
விருப்பமில்லை எந்தனுக்கு...........
பெண்ணுக்கு அடிபணிந்து................
தலை குணிந்து சேவை செய்யும்
தரம் கெட்ட மாப்பிள்ளையை........
கரம் பற்ற விருப்பமில்லை..............

பெண்ணுக்கே பெருமை சேர்க்கும்
பெருந்தகைக் குணமும் உண்டு......
குடும்பத்தைக் கோயிலாக்கும்.........
குறையாத மனமும் உண்டு...............
விரும்பி எனை ஏற்க வென்றால்.....
விரைந்து நீயும் பதிலனுப்பு...............

ஆண்மைக்கே அழகு சேர்க்கும்.......
லட்ஷணங்கள் இருந்து விட்டால்.
லட்சங்கள் தேவையில்லை ............
தனித்து நான் வாழ்ந்தாலும்..............
தரம் கெட்ட சீதனத்தால்......................
சீரளிய விருப்பமில்லை......................

லட்சங்கள் பல கொடுத்து ...................
அவலட்ஷன வாழ்க்கை வாழ...........
ஆசையில்லை எந்தனுக்கு.................
கூழ் குடித்தாவது கூடி மகிழ்ந்து......
குடும்பம் நடத்த......................................
..குறையில்லாதவன் வேண்டும்.......

காணி வீடு கார் என்று.........................
கடன் பட்டு கொடுத்துதவ................
நாதியில்லை எந்தனுக்கு.................
இத்தனையும் இருந்து விட்டால்
தனி மரமாய் நானின்று....................
தலை நிமிர்ந்து வாழ்ந்திடுவேன்.

சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.


வாழ்க்கை வாழ்வதர்க்கே . . .. . . .





வாழ்க்கை வாழ்வதர்க்கே என்றால் ...எப்படி வாழவேண்டும் .....எப்படியும் வாழலாம் என்று இருந்து விடலாமா . . .வாழ்க்கையை சுவாரஷ்யமாக வைத்திருப்பதென்பது கடினமான காரியமல்ல..........வாழ்க்கையை சிலர் விழையாட்டாக நினைக்கின்றார்கள்...........எப்படியும் வாழ்ந்து விட்டுப் போவோம் என்று பிடிப்பில்லாமல் வாழ்கிறார்கள்......
ஒவ்வொருவரும்ஓரே இடத்தில் இருந்துதான் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.......இடையிடையே துன்பமும் துயரமும் தவறுகளும் தண்டனையும்..தோல்விகளும் வரத்தான் .செய்கிறது....விளையாட்டைப் போல அனைத்தையும் தாண்டி வாழ்வதில்.பல வற்றைக் கற்றுக்கொள்கிறோம்.....அனுபவப் படுகிறோம் ......படிப்பினை பெறுகிறோம்...
வயது ஆக ஆக.நமது முதிர்ச்சிக்கு ஏற்றாப்போல்..வாழ்க்கையை கற்றுத் தேறுகிறோம் . . .. .
விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது போல்
வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது....................
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பொறுமையாக புரிந்துணர்வுடன்செயல் பட வேண்டும் "வாழ்க்கைஎன்பது ஒரு போர்க்களம்.என்றும் வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு என்றும் " சொல்லக்  கேட்கிறோம்...உண்மை தான் போராடி ஜெயிப்பது தானே வாழ்க்கை . .. . .எத்தனையோ தோல்விகளை இன்னல்களை தாண்டித்தானே வெற்றி கிடைக்கிறது....இந்த வெற்றி நமது போராட்டத்திர்க்கு கிடைத்த மகிழ்ச்சி தானே.......வாழ்க்கையை தவறான நோக்குடன்.....தவறான முறையில் கையாழுவதால் தான் பலர் தோற்றுப் போகிறார்கள்..........

'வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது ..
அதனால்தான் அது அழகாக இருக்கிறது.'


சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.
..


Wednesday, May 2, 2012

தொடர்கதை .........





இன்னும் பூக்கும்
என் பூந்தேட்டத்தில் ..
நறுமணம் வீசும்
மலர்களின் வாசனை
தொடர் கதையாய் . ..

என் உதிரத்தின்
ஒளி விளக்காய்
எனைச் சுமந்தவள்
தந்தை என்ற உறவை
அறிமுகப் படுத்தி
சேயாக எனைத் தாளாட்டி
தாயாக நான் மாறி
தனயனுக்குறவாகி . .
பேரக் குழந்தைக்கு துணையாகி
துன்பம் துயரம்
எதிலும் சலைத்திடாது
உறவைப் பேணி
உவகையுடன்
தொடரும் சொந்தங்கள்
எப்போதும் தொடர் கதைதான் . .. .

தலைமுறை தலைமுறையாய்
வழித்தோன்றலின்
மறு பிறவியாய் . .....
புது வரவில் புது உறவாய் . .
மணம் பரப்பி நிற்கும் . .
சோலைவனம்  ........
சொந்தங்கள் தொடர் கதைதான் . . . .

சுஹைதா ஏ.கரீம் . ..