Tuesday, July 24, 2012

ஆணின் அவஸ்தை.

எப்போது புரிவார்கள் ,
எப்படிப் புரிய வைப்பது..
அப்படி இப்படி என்று
சொற்படி நடப்பதை
எப்படிச் சொல்வது.

     தாய்க்குத் தலைமகனாய்
     தலைக்கு மேல் சுமை.
     முடியாது என்றிருந்தால்
     முதற் கோணல் ....
      முற்றும் கோணலாய் ...
     மூத்தவனைத் திட்டுவது.
     நீ......ஒழுங்காய்
     இருந்திருக்கலாம்...

அப்படி என்றால் .....
பெற்றோர்கள் எதர்க்கு.

     தங்கைகளைக் கரைசேர்க்க
     தலைக்கு மேல் விலை பேசி
     தாரவார்த்து விடுவது போல்
     தாரத்தைத் தேடித் திரிகிறார்கள் .
     தரம் ஒன்றும் இல்லை என்றாலும்
     வரம் வந்து முன்னிற்கும்.
     கரம் கை கொடுக்கும்.

பின்னாளின் பிரச்சனைகள்
பிள்ளை ஒன்று வருமுன்னே
தாயைப் பார்ப்பதா .....
தாரத்தைப் பார்ப்பதா....
மாறி மாறி குறைகள்
வந்து குவியும் .
குந்தி இருக்க மனமில்லா
குடும்பத்தை நிந்திக்கச் செய்யும்.

      அன்னைக்குப் பணிவிடை
      அத்தைக்குப் பிடிக்காது
      தாரத்திற்கும் தங்கைக்கும்
      தரம் தாழ்த்தா பிரச்சனை.
      தலை குணிந்தாலும் துன்பம்
      தலை நமிர்ந்தாலும்
      அர்த்தம் பல சொல்லும்....

பெண்களுக்கு மட்டுமல்ல
ஆண்களுக்கும் அவஸ்தைதான் .
புரிந்துணர்வு இருந்துவிட்டால்
புகுந்த வீட்டில் நிம்மதி கிடைக்கும்.

                                                                             சுஹைதா ஏ கரீம்
                                                                                      வெள்ளவத்தை.
     



Friday, July 20, 2012

குட்டிக் கவிதைகள்.......





ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
நிறை குறைவாக.

          ( படித்த கவிதை.)



முதுமை
-------------
                   எழுத ஆசை இருக்கு
              பேனாவில்
மை இல்லை.


         இளமை
        ------------
     பேனாவில் மை இருக்கு
       எழுத ஆசை இல்லை.

      கண்ணாடி
----------------
   முதிர்க் கன்னியின்
        முக்கய காதலன்.

          பத்திரிகை
         ----------------
சிரிக்கவும்
    சிந்திக்கவும்
      அதிர்ச்சியடையவும்
      அவமானப் படுத்தவும்
வெள்ளைக் காகிதத்தின் 
    மகரந்தச் சேரக்கை.


     கவிதை
    -------------
    கவிதை சொல்லச் சொன்னான் 
          நான் 
                அவன் பெயரை உச்சரித்தேன்..

எனது கவிதையின் 
முதல் வரி நீதான் 
     மொத்தக் கவியும்
             ஒரே வரிதான்.

    கடைத்தெரு.
       -------------------
அன்று கடைத்தெரு
        இன்று காடைத் தெரு.

பூ  
---
     பள்ளி அறையில்
    கசக்கப் படுவதாலா
         உன்னை பெண்ணுக்கு 
       ஒப்பிடுகிறார்கள்.

                                சுஹைதா ஏ கரீம்.
       


அழகான நாட்கள்...

இன்னும் என் 
  இதயத்தை
இன்பமாக்கி
  ஈரப்படுத்துகிறது
எனது பாட்டி 
வாழ்ந்த வீடு.

வியர்வைத் துளிகளால்
கழிமண் குழைத்து 
கடுமையான உழைப்பால் 
உயரவைத்த கோபுரம்.
ஒவ்வொரு சுவரும் 
வெவ்வேறு கதை கூறும்
கண்கள் கலங்கினாலும் 
உள்ளம் குளிர்ந்து போகும்


எத்தனை இன்பங்கள்
உறவுகளுக்குள் 
அன்புப் பரிமாற்றங்கள்
முற்றத்தில் இருந்து
முழு நிலவை ரசித்தபடி
பாய் விரித்தமர்ந்து
தாத்தா பாட்டி கதைகேட்டு
பாட்டுப் பாடி 
பள்ளாங்குழி  விளையாடி
நிலாச் சோறூட்டி 
உண்டு மகழ்ந்த நாட்கள்

பாதிச் சுவர் வைத்து
பார்த்துப் பார்த்து கட்டியது
வரிசையாய் கம்படுக்கி
கழிமண் குழைத்தழுத்தி
கட்சிதமாய்ச் செய்த மாளிகை
ஓலைக் கூரைக்கிடையே 
ஒளியடிக்கும் 
ஆங்காங்கே
பகலிலும் இரவிலும்
வெசாக் பண்டிகை போல
சூரியனும் சந்திரனும்


'மாலை நிலா 
ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா?'.

பார்துப் பார்த்து
பகலிரவாய் கண்விழித்து
படுத்துறங்க மெத்தை கட்டி
பாய் விரித்தமர 
 படியும் வைத்து
பக்குவமாய் சமைத்த குடில்

பனை ஓலை வேலியும்
படுத்துறங்கும் படிக்கட்டும்
மாளிகையில் கிடைக்காத
மனநிம்மதியும்
மனதை விட்டு அகல வில்லை
கண்ணுக்குள் மாளிகையாய்
கனவில் வந்து போகிறது.

                                            சுஹைதா ஏ கரீம்.
                                         வெள்ளவத்தை.









Wednesday, June 13, 2012

எதுவும் பேசாதே

எதுவும் பேசாதே
*****************



நீ நினைத்ததை முடிக்க
தீர்மாணித்து விட்டாய்
கொஞ்சம் கூட
 யோசிக்காமல்
உன் எண்ணம் 
உன் கால் 


பயனிப்பவன் நீ என்பதாலா
எதுவும் கேட்க வில்லை
சொல்லி விட்டேன்
இனியும் என்னிடம்
எதுவும் பேசாதே

உன் கனவு 
உன் வாழ்க்கை 
உணர்ந்து செயல் படு 
எனைச் சாராதே

உன் வருமானம் 
உன் அகிம்சா வாதம்
எதையும் என்னிடம்
விமர்சிக்காதே

உன் கூற்று உனக்கு 
சரி என்றால்
ஒன்றுக்கு பலதடவை
சிந்தித்து இருக்கலாம்

உனக்கு தெரியும்
 எத்தனை முறை
புத்தி புகட்டி இருப்பேன்
முன்னேற வழி காட்டியிருந்தேன்

எனை உதாசீனம் செய்து
எதில் முன்னேற்றம் 
கண்டாய் சொல்
எதையும் கேட்காமல்

இனியும் எதுவும் பேசாதே
என்றாவது ஒருநாள் 
எனை உணர்வாய் 
அன்று 
நானிருந்தால்.....

மீண்டும் வருவாய் 
என்னிடம்
ஆறுதலாய் வா 
ஆலோசனை தருகின்றேன்

இனியும் என்னிடம் 
எதுவும் வேசாதே
ஒன்றைப் புரிந்து கொள்
நீ 
முதிர்ந்த அறிவு செறிந்தவனாய் 
இருந்தபோதும்
ஆலோசனையில் 
அலட்சியம் வேண்டாம்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை






Tuesday, June 12, 2012

கனவு





இன்றும் பாதித்தூக்கத்தில்
துயில் எழும்புகிறேன்
அன்று பறிக்கப்பட்ட
எங்கள் உடமைகளும்
உணர்வுகளும் 
இன்றும் பாம்புகளாகி
கணவில் கூட 
கொத்துகிறது.

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.

வரம் ஒன்று வேண்டுகிறேன்


பிஞ்சி மொழி பேசி 
கொஞ்சி விளையாட
எனக்கு ஒரு வரம் வேண்டும்
இறைவா  அதை நீ தரவேண்டும்

பிஞ்சுக் காலால் நெஞ்சுதைத்து
பிளந்த வாயால் புன்னகை பூத்து
அள்ளி நானும் அணைத்திடவே
எனக்கு ஒரு வரம் வேண்டும்

மலடி என்றென்னை 
வையகத்தார் தூற்றாமல்
தயவுடனே வேண்டுகிறேன் 
தந்தருள்வாய் வரம் ஒன்று

அம்மா என்றழைத்திடவே 
அணைத்து நானும் மகிழ்ந்திடவே 
குறும்பாய் எனைக் கழைந்திடவே
குழந்தை வரம் தந்திடுவாய்

பள்ளி சென்று பயின்றிடவும்
பாரில் நலன் புரிந்திடவும்
இருகை யேந்தி வேண்டுகிறேன்
இறைவா எனக்கோர் வரம் தருவாய்

புகளுக்காக அல்லாமல் 
பிறர் தூற்றாதிருக்க வேண்டுமென
பத்துமாதம் சுமந்து பெற 
பகலிரவாய் வேண்டுகிறேன்

உன்னால் முடியாது ஏதுமில்லை 
என்னாறைவா
ஊர்டமத்தும் பழி கேட்டு 
என்னமாய்க் கொதிக்கிறது
 எனதுள்ளம்
அறிவாய் நீயே என்னிறைவா 
அன்பாய் எனக்கு அருள் புரிவாய்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை 


வாழ்க்கை



சின்னதாய ஒரு சந்தோஷம் 
சின்னதாய் ஒரு சஞ்சலம் 
சின்னதாய் ஒரு கோபம்
சின்னதாய் ஒரு விரக்தி
சின்னதாய் ஒரு கவலை
சின்னதாய் ஒரு எரிச்சல்

இத்தனையும் நாளுக்கு நாள்
இதயத்தில்
இட்களுக்கும் இன்னல்களுக்கும்
முகம் கொடுத்து 
மொத்தமாக சிரித்துக் கொள்கிறேன்
எனக்குள் .
நாளைய நாளின் 
நம்பிக்கையில் , , 

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை